கறைபடாத கரங்கள் துடிப்பான தலைவன் தன் தந்தை வழியில் பயணிக்கும் தூர நோக்கு கொண்ட இலங்கையின் அனைத்து மக்களுடைய இதய துடிப்பையும் உணர்ந்த ஒரே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது சஜித் பிரேமதாச மட்டுமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்றுக்காலை ஹட்டனில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் தொகுதியில் ஒரு பிரதேச சபை வெற்றிக்கொள்ள முடியாத ஒருவர் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்.

ஆனால் நான் அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். இந்த ஜனாதிபதி தேர்தலில் அரசியல் ஈடுப்பாடே இல்லாத இதுவரையில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத பலர் போட்டியிடுகின்றார்கள். அவர்களை பார்க்கின்ற பொழுது மிகவும் பொருத்தமான வேட்பாளர் சஜித் பிரேமதாச என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

அதற்கு காரணம் என்ன ? தனது தந்தையின் மறைவின் பின்பு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி பின்தங்கிய மாவட்டமாக கருதிய அம்பாந்தோட்டை மாவட்டத்ததை பொறுப்பெடுத்து அதனை அபிவிருத்தி செய்து தொடர்ந்தும் அங்கு வெற்றி பெற்று கடந்த 25 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும், பல அமைச்சுக்கு பொறுப்பாகவும் இருந்து செயல்பட்டவர் தான் சஜித் பிரேமதாச.

சஜித் பிரேமதாசவின் பொறுமைக்கு கிடைத்த வெற்றியே ஜனாதிபதி வேட்பாளர் என்றுமே தன்னுடைய நோக்கத்தில் தளர்ந்து விடாமல் தான் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காமல் கட்சியையும் பாதுகாத்து கொண்டு அணைவருடைய மனதையும் வெற்றிக்கொண்டு வேட்பாளராக களமிறங்கியவர் சஜித். அவருடைய தந்தையார் இந்த நாட்டிற்கு செய்த சேவைகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

வீடமைப்பு கம்உதாவ, ஜனசவிய, ஆடை தொழிற்சாலைகள் இப்படி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வெற்றிக்கொண்ட ஒரு மாபெரும் தலைவர். என்னை பொருத்தவரை, நான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் பிரதேச சபை தலைவராக இருந்து ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளேன்.

இன்று அவருடைய மகனோடு செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் குடும்பத்தையும் அவருடைய கொள்கைகளையும் நான் நன்கு அறிந்தவன் என்ற வகையில் அவரோடு இணைந்து பயணிப்பதை ஒரு வெற்றியாக கருதுகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.