உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழான சரத்துக்கள் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான வழக்கை முடிவிற்கு கொண்டு வருவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த தரப்பினர் அதனை விலக்கிக் கொள்வதற்கு முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மாற்றுக் கொள்கை கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது அவசரகால சட்ட விதிகள் நாட்டில் அமுலில் இல்லாமையால் இந்த மனுவை விலக்கிக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு மனுதாரர் தரப்பில் நீதி மன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த மனுவை விலக்கிக் கொள்வதற்கு உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)