இலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இது குறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்க், ‘நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் சென்றடைவதை உறுதிசெய்வதற்கு நல்லாட்சி மற்றும் சமூகங்களின் பங்களிப்பு போன்றவை அவசியமாகும். பொதுமக்களின் தேவைகளுக்கு உள்ளுராட்சிக் கட்டமைப்புக்கள் பதிலளிப்பவையாக அமைந்திருக்க வேண்டும். ‘இவை செயற்திறன் மிக்க ஆட்சிமுறையை உறுதிசெய்வதற்கும், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உதவியாக அமைகின்றன.

நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தின் ஊடாக இலங்கையில் நீண்டகால சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பங்களிப்பு வழங்கப்படுகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டமானது, உலகவங்கியிள் நிதியுதவியின்கீழ் மேற்கொள்ளப்படும் உள்ளுராட்சிமன்ற அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளன.