பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்தில் முதலாம் இலக்க தொடர் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மண்மேடு ஒன்று கற்பாறையுடன் சரிந்து விழுந்துள்ளமையால் ஒரு குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த 7 குடும்பங்களை சேர்ந்த 56 பேரை இடம் பெயருமாறு அறிவிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் குறித்த தோட்ட பகுதிக்கு தேசிய கட்டிட ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ, சென்மரிஸ் மத்திய கல்லூரியின் 6 வகுப்பறைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் வகுப்பறைகள் சேறும் சகதியுமாக காணப்படுவதோடு, மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டள்ளனர். இதேவேளை, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இதனால் தரம் 6 இல் 4 வகுப்பறைகளும் உயர் தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவு வகுப்பறைகளும் இவ்வாறு பாதிக்கபட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று தாமதமாகவே ஆரம்பிக்கபட்டதாக கல்லூரியின் அதிபர் ஏ. வேலுசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் பொகவந்தலாவ கிலானி தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.