ஜனாதிபதி தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை குறிப்பிடதக்களவு அதிகரித்துள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த அதிகரித்த நிலைமையை அவதானிக்க முடிவதாக அந்த அமைப்பின் உதவி பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் அமைச்சுக்களின் வாகனங்களையும் சொத்துக்களையும் தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த செயலை தடுக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும் உரிய உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த செயற்பாட்டை உடனடியாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை வலல்லாவிட பிரதேச சபைக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளுடன் கைபற்றப்பட்டுள்ளதாகவும் கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுக்களுக்கு சொத்தமான வாகனங்கள் தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அஹமட் மனாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் 131 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை பிரச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.