கிளிநொச்சியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரியளவிலான போதைப்பொருள் கைமாற்றப்படப்போவதாக பொலிஸார் மற்றும் மதுவரி திணைக்களத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போதைப்பொருள் கடத்திச் செல்லப்படும் வாகனத்தைப் போலவே மது வரித்திணைக்களத்தினரும் வாகனம் ஒன்றை வாடகைக்குப் பெற்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை பின்தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தப்பட்ட வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

குறித்த வாகனம் முன்னேறிச் செல்லவே பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், மதுவரி திணைக்களத்தினரால் ஓட்டிச் செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மன்னாரை சேர்ந்த 38 வயதானவரே இதில் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.