அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது.

அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி இன்று முதல் ஆரம்பமாவதாகவும் அவர் கூறினார்.

தொழில்சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்ட போது பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் முதல் சுற்றுத் தெரிவு பூர்த்திசெய்யப்பட்டு வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ மற்றும் பொறியியல்பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரத்தினபுரி – குளியாப்பிட்டிய புதிய வைத்தியபீடங்கள் ஆரமபிக்கப்படுவதுடன் மருத்துவ கற்கை நெறியைத் தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 200 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்திய பீடங்களுக்குத் தேவையான கட்டிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)