ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. ஆயினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்பட்டுக் கொண்டதுடன் ஆவணத்தில் கையொப்பம் இடாமல் இறுதியில் வெளிநடப்புச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.