மலேசியாவில் புலிகளின் அமைப்பிற்கு ஆதரவளித்தமை தொடர்பில் கைதான 12 பேரும் காவற்துறையினரால் நியாயமான காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் சூழலில் மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட் இது தொடர்பில் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக தெரிவித்து, அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு மலேசியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களினது தொலைபேசி, அவர்கள் தங்கியிருந்த இடம் என்பவற்றை மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது தமீழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய தகவல்களுடன், சுவரொட்டிகள், அச்சுப்படங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தமது காவற்துறையினர் விளக்கமளித்திருப்பதாகவும், அவை ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களே என்றும் அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.