யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையை இன்றுமுற்பகல் 10மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறங்கியுள்ளது. இந்தியாவின் சென்னையிலிருந்து வந்த அலைன்ஸ் எயார் நிறுவன விமானமே தரையிறங்கியுள்ளது. இன்றைய நிகழ்வில் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அசோக் அபேசிங்க, ரவி கருணாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ சுமந்திரன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன், யாழ். மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், அலைன்ஸ் எயார் நிறுவன உயரதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே இந்த விமான சேவை இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என அதிகார சபையின் அதிகாரி நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.

இந்தியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களே இந்த சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. முதலில் பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் வடக்கில் ஆரம்பமாவதை அடுத்து அந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தி அடையக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேபோன்று இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.