புத்தளம் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 623 குடும்பங்களைச் சேர்ந்த 2183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வீடுகள், பாடசாலைகள், மதஸ்தளங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பனவும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது. புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 622 குடும்பங்களும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரும், வென்னப்பு பிரதேச செயலகத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 295 பேரும், கருவலகஸ்வெள பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேரும், சிலாபம் பிரதேச செயலகத்தில் 25 குடும்பங்களைச் சர்ந்த 110 பேரும், புத்தளம் பிரதேச செயலகத்தில் 208 குடும்பங்களைச் சேர்ந்த 648 பேரும்,

மஹாவௌ பிரதேச செயலகத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்தார்.

இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, புத்தளம் எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் வீதி கடந்த 14ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலாஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் புத்தளம் பழைய எலுவங்குளம் சப்பாத்து பாலத்திற்கு மேலாக இரண்டரை அடி உயரத்தில் நீர் மேவிப் பாய்வதாலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முந்தல் பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புபுதுகம, மதுரங்குளி, மங்களஎளிய மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பிரதேசங்களுக்கு முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகா நேற்று புதன்கிழமை காலை கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்வையிட்டார்.

அத்துடன், அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, நீர் என்பனவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், குறித்த பிரதேசத்தில் உள்ள வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.