இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக மீண்டும் அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களினால் இங்கிலாந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் இன்று தொடக்கம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிக்கு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தலையிட்டு குறித்த பிடியாணையை நீக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.