ஒக்டோபர் 3ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்தொழிலாளர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,
யாழ்ப்பாணத்தில், இன்று (23) மாபெரும் பேரணி இடம்பெற்றதுடன், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனமும் எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பேரணியும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்துக்கு முன்னால், முற்பகல் 10.15 மணியளவில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் மனைவிமார், தாய்மார், சகோதரர்கள், உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரைச் சென்றனர்.
வடக்கு மாகாண ஆளநர் அலுவலகத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள், அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.செல்வநாயகத்தைச் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றைக் கையளித்தனர்.
அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடும் நோக்குடன் மேற்படி தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இதன்போது, துணைத்தூதரக அதிகாரிகள் குழுவை மேற்படி யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிதிகளும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தவர்களும் இணைந்து சந்தித்துக் கலந்துரையாடினர்.
சந்திப்பின் நிறைவில், துணைத்தூதரக அதிகாரிகளிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.