கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றிற்கு அறிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பல நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் நீதிமன்றிற்கு அறிவித்தார்.

இந்த வழக்கினை கொழும்பு பிரதான நீதிவானிடம் இருந்து விலக்கி வேறொரு நீதவானின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றில் கோரியிருந்தார்.

குறித்த கோரிக்கைக்கு பதில் அளித்த கொழும்பு மேலதிக நீதவான், குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவானிடம் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குறித்த இருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.