கோட்டை பொலிஸ் பிரிவில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு பேரணியின் போது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறும், மஹாபொல கொடுபனவுகளை தாமதமின்றி பெற்றுத்தருமாறும் கோரி பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று பிற்பகல் எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்ப்பாளர்கள் மருதானையில் இருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த நிலையில், லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்தனர்.

இதன்போது, வீதித்தடையை மீறி எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி, 53 மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் அதில் 52 மாணவர்கள், ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அதில் ஒரு மாணவருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் வேறொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரை எதிர்வரும் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்