ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய 56 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் 16 முறைப்பாடுகளும், தேர்தலை இலக்காக கொண்டு ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கியமை தொடர்பில் 11 முறைப்பாடுகளும், அரச அதிகாரிகளுக்கு புதிய நியமனம், இடமாற்றம் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 07 முறைப்பாடுகளும், அரச அதிகாரிகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் 06 முறைப்பாடுகளும் மற்றும் அரச வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 04 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக, அரச அனுசரணையுடன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தமை தொடர்பில் 04 முறைப்பாடுகளும், அரச அனுசரணையுடன் ஊக்கத் தொகைகள் வழங்கியமை தொடர்பில் 03 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியமை தொடர்பில் 03 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரிகளை பயன்படுத்தியமை தொடர்பில் 02 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த முறைப்பாடுகளில் உறுதி செய்யப்பட்ட 48 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தேர்தல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படக்கூடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.