எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான பிரசாரங்கள் அடுத்த மாதம் 13ம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றன.
இந்த ஜனாதிபதித் தேர்தலில்கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளைவழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக அதிகளவானோரின் பங்களிப்பு ஆணைக்குழுவிற்குத் தேவைப்படுகிறது. உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேவையான வாகனங்கள் உட்பட ஏனையவசதிகளை வழங்குவது பற்றி ஆணைக்குழு கவனம் செலுத்தியிருக்கிறது. இவர்களுக்குத் தேவையான வாகனங்களை தனியார் துறையின் ஒத்துழைப்போடு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகளும் புதிதாக கொள்வனவு செய்யப்பட உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 ஆயிரம்வாக்குப் பெட்டிகள் அவசியமாகும். கண்காணிப்புப் பணிகளுக்கென வெளிநாட்டுக் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2ம் திகதி இந்தக் குழுக்கள் இலங்கைக்கு வரவிருக்கின்றன. பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றின் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கெனவே இலங்கை வந்திருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சிச் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவிருக்கிறது. உதவித் தேர்தல் ஆணையாளர்கள், தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு அழைக்காது, அவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் வழிகாட்டல்களையும், வழிநடத்தல்களையும் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..

(அரசாங்க தகவல் திணைக்களம்)