தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களிலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களை மற்றும் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் அடையாளங்கள்,

புகைப்படங்கள் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டுதல் தேர்தல் விதிமுறை மீறலாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்திற்கு அமைய குற்றமாக கருத்தப்படுவதால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் உடனடியாக அவற்றை அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்தின் அதிகாரிகள் இத்தினங்களில் வீடுகளுக்கு வரவுள்ளதால், வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை கட்டி வைத்து ஆதரவளிக்குமாறு இன்று (29) முற்பகல் அத தெரண ரிவி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கோரிக்கை விடுத்தார்.

தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மிகவும் பாதுகாப்பாக பரிமாற்ற வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

அதன்படி, தபால் வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானது என தெரிவித்த அவர், தபால் வாக்கினை செலுத்துவதற்கு முன்னரும் மற்றும் வாக்கினை செலுத்திய பின்னரும், தபால் திணைக்களத்தின் ஊடாகவே ஆவணங்கள் பரிமாற்றப்படுகின்றதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு தேவையான பாதுகாப்பை பெற்றுத் தருமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், இத்தினங்களில் வீடுகளில் ஒருவரேனும் தங்கியிருக்குமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.