தபால் மூல வாக்களிப்பில் தமிழ் மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 5 கட்சிகளின் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், எஸ்.சதானந்தம், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, ஹென்ரி மகேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளியாகாததால் இறுதி முடிவையும் எடுப்பதில்லை என்றும், தபால்மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கும்படியும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8ஆவது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு நாளை ஆரம்பமாகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று ஐந்து தமிழ் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.