இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே சின்னம் தொடர்பிலும் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் குழப்பம் அல்லது தெளிவின்மை காணப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த அவர், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 1981 – 5ம் இலக்க சட்டத்தில் வாக்களிப்பது தொடர்பிலும், விருப்பு வாக்கு தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவர் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால் அந்த வேட்பாளரது சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட வேண்டும். மாறாக ஒரு வேட்பாளர் மாத்திரமின்றி பிரிதொரு வேட்பாளருக்கு விருப்பு வாக்கினை வழங்குபவர்கள் முதலாம் தெரிவிற்கு ‘1’ என இலக்கமிட வேண்டும். இரண்டாம் தெரிவிற்கு ‘2’ என இலக்கமிட வேண்டும். மூன்றாம் விருப்ப தெரிவு காணப்படுமானால் ‘3’ என்று இலக்கமிட வேண்டும். எனினும் விருப்பு வாக்குகள் என்பது கட்டாயமானதல்ல.

வாக்களிக்கும் போது முதலாம் தெரிவுக்கு புள்ளடியிட்டால், இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவுகளுக்கு இலக்கமிட முடியாது. அதே போன்று ஒரே வாக்குச் சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளடியிடவும் முடியாது. இவ்வாறான வாக்குகளே நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக இனங்காணப்படும்.

அத்தோடு முதலில் ஒரு சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட்டு பின்னர் அது தவறெனக் கருதி அதனை கிறுக்கல் மூலம் நிராகரித்து மீண்டுமொரு சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட்டால் அந்த வாக்கும் செல்லுபடியற்றதாகவே கருதப்படும். எனவே மக்கள் வாக்களிக்கும் விடயத்தில் தெளிவுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் – என்றார்.