தெஹிவளை கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக ஒன்றுகூடல் களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் சட்டவிரோத போதை பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் சமூக வலைத்தளத்தினை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இரவு நேர விருந்துபசார களியாட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கேரள கஞ்சா மற்றும் இனங்காணப்படாத அபாயகரமான போதை குளிசைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 17 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 17 முதல் 48 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 4 கிலோகிராம் கேரள கஞ்சா, 38,500 மில்லி லீட்டர் பியர் மற்றும் 28 சட்டவிரோத சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பலாங்கொடை களுத்துறை, குருநாகல், மற்றும் பொலநறுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.