ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புளொட்டின் நிலைப்பாடு தொடர்பாக அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது. அதுபோல் தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) எதிர்வரும் 6ம் திகதி தங்களுடைய முடிவைச் சொல்வதாக கூறப்பட்டிருக்கின்றது.

கடந்த 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெற்ற எமது கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, முக்கியமான வேட்பாளர்களுடைய கொள்கை நிலைப்பாடுகள் ஆராயப்பட்டு அந்த வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கலாம் என்ற ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளுடன் ஏற்படக்கூடிய புரிந்துணர்வின்படி எடுக்கக்கூடிய தீர்மானத்தை எமது கட்சியும் ஆதரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளுடனும் சேர்ந்து பத்திரிகைகளுக்கு அறிவிப்பதாகவும் இருந்தது. இன்று (04.11.2019) திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த தீர்மானங்கள் தொடர்பாக கலந்துரையாடி, எங்களுடைய ஆதரவினைக் கேட்டதோடு, இது சம்பந்தமான முடிவினை மிக விரைவாக அறிவிக்கும்படியும் கேட்டிருந்தார். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக விரைவில் எங்கடைய நிலைப்பாட்டினை கூறுவோம் என்றார்.