வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் ஆறு பேர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் இன்றுகாலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்றுமாலை தொழில் நிமித்தம் சென்ற மின்சாரசபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மின்சாரசபை ஊழியர்கள் அறுவர் படுகாயடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு தலைமை வகித்தவர் உட்பட இன்னும் பலர் கைது செய்யப்படாமை மற்றும் பொலிஸாரின் அசமந்தப்போக்கு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே வவுனியா மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி உடன் கைது செய்யப்பட வேண்டும். பொலிஸாரின் பாதுகாப்புடன் இருந்து வரும் தாக்குதல் குழுவினரை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

அதுவரை எமது போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். எமது கடமையை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவசர தேவைகள் உட்பட அனைத்துப்பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.