முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ‘நாம் ஸ்ரீ லங்கா’ மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரின் பங்குபற்றுதலில் இந்த மாநாடு நடைபெற்றது. கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.இம்மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,

வேட்பாளர்கள் இருவரும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர். நான் அவற்றை நன்கு வாசித்துப் பார்த்தேன். கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், அவரின் உரைகளில் அழகான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்.

மக்களுக்கு சுதந்திரத்தை வழங்குவாராம். எனக்கு சிரிப்பே வந்தது. இலங்கையில் ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீதிகளே, இந்த உலகிலேயே அதிக தொகை செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதிகளாம். தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன்.

லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, கீத் நொயார் உள்ளிட்ட இந்நாட்டின் ஊடகவியலாளர்களை கொலை செய்தீர்களா? இல்லையா? மற்றைய வேட்பாளரின் வேலைத்திட்டங்களையும் நான் பார்த்தேன். மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டமுள்ளது. என குறிப்பிட்டார்.