வவுனியா மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்யாவிடின் நாளை நண்பகல் 12 மணி முதல் வடமாகாண மின்சார சபை ஊழியர்கள் உள்ளடங்கிய பணி பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் வடமாகாண மின்சார சபை அதிகாரிகள் நாளை காலை 6 மணி முதல் கடமைகளில் இருந்து விலகி குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…´கடந்த நான்காம் திகதி வவுனியா மின்சார சபையின் நுகர்வோர் சேவை கண்காணிப்பாளர் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதலை நடத்தியவர் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை போதை பொருள் விற்பனையிலும் ஈடுபடுகின்றார்.

சில அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் தேடி பார்த்தோம். அப்போது அது உண்மை என தெரியவந்தது. குறித்த நபர் தனக்கு பொலிஸார் மத்தியில் உள்ள செல்வாக்கு தொடர்பில் பல முறை அறிவித்தே தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்கள் கடந்துள்ளன. ஆனால் அந்த சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை.

அவரை இன்று நண்பகல் 12 மணிக்குள் கைது செய்வதாக பொலிஸார் கூறினர். ஆனால் பொலிஸாரால் அவரை கைது செய்ய முடியாமல் போயுள்ளது. ஆகவே அவரிடம் இருந்து பொலிஸார் பணம் பெற்றார்களா என எமக்கு சந்தேகம் உள்ளது. வவுனியா மின்சார சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு பாதுகாப்பு இல்லாமையே காரணம்.

மாறாக பணிபகிஸ்கரிப்பை நாம் முன்னேடுக்கவில்லை. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளரை தெளிவுப்படுத்தியுள்ளோம். பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க தயாரான போது அது கைவிடப்பட்டுள்ளது. பொலிஸார் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் எமக்கு அதில் துளியளவும் நம்பிக்கையில்லை.

இதனால் நாளை நண்பகல் 12 மணிவரை சந்தேக நபரை கைது செய்யுமாறு நாம் பொலிஸாருக்கு காலக்கெடு வழங்கியுள்ளோம். அவ்வாறு அவரை கைது செய்யாவிடின் நாடு தழுவிய ரீதியில் கடமையாற்றும் சகல மின் கண்காணிப்பாளர்களும் சேவையில் இருந்து விலகுவர்.

எமக்கு ஆதரவாக பஸ் டிபோக்களின் ஊழியர்களும் பணி பகிர்ப்பில் ஈடுபடுவர். எமது பாதுகாப்பை கருதியே நாம் இதனை முன்னெடுக்கவுள்ளோம். இதேவேளை சம்பவம் தொடர்பில் இதுவரை எழுவர் கைதுசெய்யப்பட்டு அவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன வெலிகல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வவுனியா பொலிஸாரால் தொடர்ந்தும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை தாமதப்படுத்தப்பதப்படுவதாகவும் ஆகையால் உடனடியாக சட்டத்தை நடைமுறைபடுத்த பொலிஸார் முன்வர வேண்டும் எனவும் வவுனியா மின்சார சபை ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

இதேவேளை மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள வீடியோ காணொளியின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் இன்று அதிகாலை ஏழு பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.