அனைத்து ஊடகங்களும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிவுருத்தலுக்கமைய செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் சட்டத்தில் 31 வது சரத்தின் கீழ் ஆணையொன்றை பிரயோகிக்கும்மாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் குறிப்பிடப்படுவதாவது,தேர்தலின் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்ததுடன், இதில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் சில தொலைக்காட்சி அலைவரிசைகள் அலட்சியமற்று இருப்தாகவே எமக்கு தோன்றுகின்றது.

இந்நிலைமை சுதந்திரமான, நியாயமான தேர்தலை முன்னெடுப்பதற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கின்ற அதேவேளை தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடர்பில் தம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஆணைக்குழு பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வெளிவந்த அதிவிசேட வர்த்தமானியில் அனைத்து தனியார் தொலைகாட்சி அலைவரிசைகள், தனியார் அச்சு ஊடகங்கள், இணையங்கள் , நடைமுறை மற்றும் ஸ்தீரமான தொலைபேசி அழைப்பு சேவைகள் அனைத்தும் தேர்தல் நடவடிக்கைகளின் போது தேர்தல் சட்டவிதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் அனைத்து ஊடகங்களும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்றே சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை தொலைகாட்சி அலைவரிசைகளின் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அமைச்சரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.