கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தினை வழிமறித்து சிலர் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன்போது பின்னால் வந்த வாகனத்தில் இருந்த மெய்ப்பாதுகாவலர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை மேற்படி துப்பாக்கி பிரயோகம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்திய இரண்டு கைத் துப்பாக்கிகளுடன் கினிகத்தேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்களில் இருந்த 3 வெற்று ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சந்தேக நபர்களை அடையாளம் காண ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.