இலங்கையின் வளிமண்டலத்தில் கடந்த தினங்களில் தூசு துகள்கள் அதிகரித்திருந்தன. எனினும் இது சாதாரண மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலானது இல்லை என்று, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் வளி தர குறியீடு குறித்த ஆய்வின் பல்வேறு விடயங்களை மையப்படுத்தி, ஆய்வு செய்திருப்பதாகவும் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கில் இருந்து வீசிய காற்றின் ஊடாக குறித்த தூசி துகள்கள் இலங்கையின் வளிமண்டலத்தில் கலந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதனால் கடந்த தினங்களில் கொழும்பிலும் நாட்டின் ஏனைய சில இடங்களிலும் தூசு படிமங்கள் கலந்த முகில்கள் சூழ்ந்திருந்தன. வளிமண்டலத்தின் தூசு துகள்களின் மட்டம் 100 சதவீதம் அதிகரித்தால், வளி தரக் குறியீடு 150 புள்ளிகளாக உயர்வடைந்திருந்தது.

எனினும் தற்போது தூசு துகள்களின் மட்டம் 60 சதவீதத்தால் குறைவடைந்திருப்பதாக, கட்டிட ஆராச்சி பணிமனை தெரிவித்துள்ளது. அதேநேரம் எதிர்வரும் 13ம் திகதி இந்தநிலைமை மீண்டும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது சாதாரண மனித வாழ்க்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மத்திய சுற்றாடல் அதிகார சபை விளக்கமளித்துள்ளது. இவ்விடயத்தில் அனர்த்த முகாமை மையம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் என்பன அவதானத்துடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.