யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொறுக்கி வீட்டின் முன்பாக இருந்த வாகனத்தையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சித்த மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இச் சம்பவம் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டுகாரர்கள் அவசர தேவையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ள நிலையில் வீட்டில் யாருமில்லாத்தால் வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. இதன்போது வீட்டின் கதவு ஐன்னல் உட்பட வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் தீ பற்றி எரிந்ததை அவதானித்த அயலவர்கள் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கும் அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. அதேநேரம் பற்றி எரிந்த வீடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆயினும் வீட்டில் நின்றிருந்த வாகனம் வீட்டில் இருந்த பொருட்கள் உட்பட வீடும் எரிந்து சேதமடைந்துள்ளதால் பல இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.