வவுனியாவில், டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் திருநாவற்குளத்தைச் சேர்ந்த 9வயது சிறுமியான சுரேஸ் பிரியங்கா உயிரிழந்தமைக்கு போக்குவரத்து பொலிஸாரின் அசமந்தமே காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் வவுனியா, ஹொரவப்பொத்தான வீதி இலுப்பையடியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியில் சென்ற தாய் மற்றும் சிறுமியை மோதியதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்குள் சிக்கிய சிறுமி தலை சிதறி சம்பவ இடத்தியேயே உயிரிழந்தார். சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமியின் தயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுமக்கள், வவுனியா போக்குவரத்து பொலிஸார் பொறுப்பான விதத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை.

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நாற்சந்தியில் நின்று கண்காணிக்கும் பொலிஸார் மோட்டார் வண்டியில் பயணிப்பவர்களை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்வதுடன் தங்கள் பணிகளை முடித்து கொள்கிறார்கள்.

குறித்த சந்தியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து பொலிஸார் 50 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நிற்கும் உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதில்லை. அப்பகுதியில் தரித்து நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதியில் ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு தண்டப்பணம் அறவிடுவதிலேயே பொலிஸார் குறியாக இருக்கின்றனர். பாடசாலை நேரங்களில் பயணிக்கும் கனரக வாகனங்களையோ, மணல் மற்றும் கற்களை ஏற்றிவரும் டிப்பர் வாகனங்களையோ பொலிஸார் கவனிப்பதில்லை.

இலங்கை போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் மாலை 6மணிக்கு பின்பே கனகரக வாகனங்கள் நகருக்குள் பிரவேசிக்க முடியும் என்ற சட்டத்தையும் அமுல்படுத்துவதில்லை. விபத்தில் மாலை 3.30 மணிக்கே குறித்த சிறுமி பலியாகியிருந்தார்.

கற்களை ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை போக்குவரத்து பொலிஸார் எவ்வாறு நகர் பகுதிக்குள் அனுமதித்தனர்? அத்துடன் விபத்து நடந்த பகுதியில் பாதசாரிகள் வீதி கடவை இரண்டு அமைக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக பாதசாரிகள் கடவையில் நிறுத்தாமல் பயணிக்கின்றன.

வவுனியா நகருக்குள் கனகரக வாகனங்களை அனுமதிக்கும் நேரத்தை மட்டுப்படுத்தி, ஹொரவப்பொத்தான வீதியில் தரித்து நிற்கும் தனியார் பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்வதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.