தமிழ்நாடு – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் இலங்கை தமிழர்கள் 38 பேர் உட்பட பங்களாதேஷ், சீனா, பல்கேரியா முதலான நாடுகளை சேர்ந்த 70 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விஸா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை, போலி கடவுச்சீட்டில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தமை, போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட 46 பேர் தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி நேற்று முன்தினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தங்களை கைதுசெய்து முகாமில் தடுத்து வைத்திருப்பதாகவும், வழக்கில் பிணை அனுமதி கிடைத்தும் தங்களை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் மறுப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 46 கைதிகளில் 20 பேர் இன்றுகாலை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் முகாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேநேரம், முகாமில் கைதிகளுக்கு நஞ்சு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.