நாடளாவிய ரீதியில் இதுவரை சகல பொலிஸ் நிலையங்களிலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை தொடர்பில் 57 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நேற்யை தினம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்று தொடர்பில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுதெனிய – சூரியதேவ விகாரையின் விகாராதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குறித்த விகாராதிபதியால் முறைப்பாடளிக்கப்பட்டமைக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் திம்புலாகல பிரதேசபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமரவிக்கிரம என்பவராவார். இவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு தெஹியத்தகன்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று இன்றைய தினம் 27 வயதுடைய எம்மாத்தகம – பலவத்கம, தெவனகல பிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதுடன் இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவ சோதனைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.