கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிலுள்ள தட்டுவன் கொட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 11 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அப்பகுதியில் அநாமதேயமாக சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் நடமாடியுள்ளனர்.

சிறிது நெரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நபர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதன்போது கிராம சேவையாளரின் இரு சகுhதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்று விட்ட சகோதரர் ஆகியோரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 08.09.2019அன்று குறித்த கிராமசேவையாளரை தாக்கியமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் கடமையாற்றிய கிராமசேவையாளர் அச்சம் காரணமாக வேறு இடத்தில் கடமை செய்து வரும் அதேவேளை, பிரிதொரு இடத்தில் தங்கி கடமைகளை செய்து வருகின்றார். அப்பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாகவே பிரிதொரு இடத்தில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அக் கிராமசேவையாளர் தெரிவிக்கின்றார்.

அங்கு நின்ற வாகனம் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான மணல் சூரையாடப்பட்டு வெளி மாவட்டங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த பகுதியில் கடமையாற்றிவந்த அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த கிராம சேவையாளர் தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்.

பொலிசாருடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து வந்த நிலையில் குறித்த கிராம சேவையாளருக்கு அப்பகுதி மக்கள் சிலரால் தொடர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இந்த நிலையில் அவருடைய குடும்பமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், நேர்மையான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளிற்கு பாதுகாப்பற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் அதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முற்படும் சமூக ஆர்வலர்கள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

எனவே இவ்வாறான நிலையில், நேர்மையான அதிகாரிகள், சாட்சியாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிசார் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலை தொடரும் பட்சத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படும் அதேவேளை, அதிகாரிகளும், சாட்சியாளர்களும் அச்சம் காரணமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.