இந்த நாட்டில் எவ்வாறெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அவ்வாறு கொள்ளையடித்து நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கிய ராஜபக்ஷவினரிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புத்தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இந்தப் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, ஐக்கிய தேசியக்கட்சி புத்தளம் அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி, ஸ்ரீ.சு.கட்சி கரைத்தீவு அமைப்பாளர் முஹம்மது சிபான் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி உள்ள10ராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மூத்த உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக புரையோடிக்கிடந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 75 சதவீதம் எனது தலைமையிலான அரசாங்கத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ராஜபக்ஷ குடும்பத்தினர் இப்போது என்ன கூறி வருகிறார்கள்.

யுத்தத்தை தனது அரசாங்கத்திலேயே முழுமையாக நிறுத்தப்பட்டதாக ராஜபக்ஷ சகோதரர்கள் தேர்தல் மேடைகளில் தெரிவித்து வருவதை உங்களால் காணமுடியும். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாட்டில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, பல அபிவிருத்திப் பணிகளை செய்து 2005ஆம் ஆண்டு நான் இந்த நாட்டை மஹிந்த ராஷபக்ஷவிடம் பொறுப்புக்கொடுத்த போது நிதிகூட மிச்சமாகவே இருந்தது. அதன் பின்னர் ராஜபக்ஷ குடும்பம் என்ன செய்தது என்பதை நாட்டிலுள்ள அனைவரும் அறிந்த விடயமே.

நாட்டிலுள்ள எல்லா வளங்களையும் சூரையாடி, கொள்ளையடித்து இந்த நாட்டு மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கி நாட்டையும் ஏழை நாடாக மாற்றினார்கள். ஒரு வீதியைப் போடுவதற்கு பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்தார்கள். அமெரிக்காவில் கூட ஒரு வீதியை புனரமைப்பதற்கு அவ்வளவு நிதி செலவு செய்யப்படுவதில்லை. ஆனால், மஹிந்த அரசாங்கத்தில் அதை விடவும் ஒன்பது மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதிகள் புனரமைக்கப்பட்டது.

நுரைச்சோலை அனல் மின்சாரம் எனது அரசாங்கத்திலேயே அமைப்பதற்கு தீர்மானிகக்ப்பட்டு சீன அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன. 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்கள் எனது அரசாங்கத்தில் செய்யப்பட்டன.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எனது அரசாங்கத்தில் செய்துகொளள்ப்பட்ட ஒப்பந்தங்களை தூக்கியெறிந்துவிட்டு அவர் சீன அரசாங்கத்தோடு 510 மில்லியன் டொலர் நிதியில் நுரைச்சோலை அனல் மின்சாரத்தை நிர்மாணிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டனர். இதனால் பெற்ற கொமிஷன் 1500 கோடியாகும். இதனை சீன நாட்டைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரே என்னிடம் கூறினார். இந்த தகவல் பிழையாக இருந்தால் எனக்கு எதிராக அவர்கள் வழக்கு தொடரட்டும்.

இவ்வாறு இந்த நாட்டில் என்ன அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தாலும் அதற்கு கூடுதலான கொமிஷன் பெற்றுக்கொண்டனர். அவர்கள் செய்யும் வேலைகளை யாராலும் தட்டிக்கேட்க முடியாது. அவ்வாறு தட்டிக் கேட்ட ஊடக நிறுவனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நாட்டில் அனைவருக்கும் சமமாக வாழ்ந்து, தமது சமயக் கடமைகளை சுதந்திரமாக முன்னெடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை இருந்தும் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அவை பாரிய கேள்விக்குரிக்கு உள்ளாக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டு முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக பொதுபலசேனா, ராஜபக்ஷவினர் சிங்கள ராவய போன்ற பேரினவாத அமைப்புக்களை கூலிக்கு அமர்த்தி முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதுபோல இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு நாட்டு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கி அவர்களோடு இருக்கிறார்கள் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ராஜபக்ஷவினர் இந்த அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் மக்களை தூரமாக்குவதற்காக அதே இனலாதக் கும்பலை மீண்டும் கூலிக்கு அமர்த்தி திகன, மினுவாங்கொடை போன்ற தாக்குதலுக்கும் காரணமாக இருந்தனர்.

நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு, தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இந்த நாட்டில் தலைவிரித்தாடுகின்ற சிங்களப் பயங்கரவதாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், தமிழ் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒன்றாக ஐக்கியத்துடன், தத்தமது சமயக் கடமைகளை சுதந்திரமாக செய்துகொண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதையே நாங்கள் ஆசைப்படுகிறோம்.

எனவே, இவை எல்லாம் யாருடைய ஆட்சியில் பெற்றுத்தரப்படும் என்பதை நீங்கள் இப்போது புரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களில் செய்ய முடியுமான பல அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்திலும் ஒரு சிலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கிறது.

சஜித் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இவற்றுக்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இந்த நாடு பொருளாதார பாரிய பின்னடைவில் காணப்பட்ட போதிலும் இந்த அரசாங்கத்திலேயே அவை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.

பொலிஸ் திணைக்களம், நீதிமன்றங்கள் அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தது. ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரமாக தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டது.

எனவே, இவ்வாறானதொரு சுதந்திரமான யுகத்தை கொண்டுவரப் போகிறீர்களா அல்லது இருண்ட, சர்வதிகாரப் போக்குடைய ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்கு வாக்களிக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான் இப்போது முடிவெடுத்து விட்டேன். ஆனால், நீங்கள் சிந்தித்து போடும் ஒவ்வொரு வாக்குகளும் உங்களையும், உங்களது எதிர்கால சந்ததியினரையும் பாதுகாத்து நிம்மதியாக வாழவைக்கும் என்றார்.