யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறித்த விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து இன்று முற்பகல் 10.35 க்கு யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.10 க்கு இந்தியா நோக்கி விமானம் ஒன்று புறப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிப்பதற்காக ஒரு வழி விமான கட்டணமாக 12,990 ரூபா அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. ஆனால் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பணிகளால் விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.