இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானிக்கும் சூழலில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நடைபெறுவது ஜனாதிபதித் தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா? என்ற சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் தீர்வைப் பெற்றுக் கொடுத்ததையடுத்து, எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் இம்முறை ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாகவும் எண்ணும் நிலையங்களாகவும் பயன்படுத்தப்படவிருப்பதால், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்கெடுப்பு நேரத்தை ஒரு மணித்தியாலமாக அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது. இதனால், தபால் மூல வாக்குகளை எண்ணும் பணியும் ஒரு மணித்தியாலத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால், இம்முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் சட்ட விதிகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

வேட்பாளர்களுக்கு மாத்திரமன்றி வாக்காளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். அதன்படி, வேட்பாளர்கள் எவரும் தமக்கு அன்றி வேறொரு வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்ய முடியாது. வாக்காளர்களுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது.

தமது ஆதரவாளர்களுக்கு மதுபானம் வழங்கக்கூடாது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள இவ்வாறான செயல்களை மீறிச் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், எதிர்காலத்தில் அவர்கள் தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதிக்கப்படும்.

அதேநேரம், வாக்களிக்கும் ஒரு வாக்காளர் தாம் வாக்களிப்பதைப் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால், அவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அனைவரதும் பெயர் விபரங்ளைகளையும் கட்சியின் சின்னங்களையும் தாங்கியதாக இம்முறை 26 அங்குலம் (66 செ.மீ) நீளத்தில் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.

சில வாக்கெடுப்பு நிலையங்களின் அளவும் பெரிதாக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள விசேட ‘கார்ட்போட்’ வாக்குப் பெட்டிகளுக்கும் பூட்டுப்போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.