2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 82 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 70 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தினத்தில் பாதுகாப்பு பணிக்காக 60 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,

12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, 12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகளில் 25 ஆயிரத்து 712 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு பூராகவும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளையும் உள்ளடக்கிய வகையில் மூன்றாயிரத்து 43 பொலிஸ் நடமாடும் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், பொலிஸ் நடமாடும் 6 ஆயிரத்து 86 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

43 வாக்கு எண்ணும் மையத்திற்காக இரண்டாயிரத்து 193 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.