இரட்டை பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கேனும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்அக்குடும்பங்களுக்கு நிதி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (14) இடம்பெற்றது.

இரட்டைக் குழந்தைகள், ஒரே தடவையில் பிறந்த மூன்று, நான்கு மற்றும் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட 69 குடும்பங்களுக்கு அப்பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக, ரூபாய் 10 இலட்சம், 20 இலட்சம் மற்றும் 25 இலட்சம் வீதம் இதன்போது நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

“இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொண்ட போதிலும் அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு நிதி அன்பளிப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய நாடெங்கிலுமுள்ள இரட்டைப் பிள்ளைகளின் நலனுக்காக பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால், 2019ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்துடன் இணைந்ததாக விசேட நிதியமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அந்நிதியத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக “திரிதரு சம்பத்த” எனும் பெயரில் புதிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டு ஜனாதிபதியால் நேற்று (14) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.