ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை முழுவதும் 2200 க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.அதேபோல் அதற்கு மேலதிகமாக நடமாடும் கண்காணிப்பு பணிகளும் இடம்பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார்.

இலங்கையின் எழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக எட்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது.

இந்த முறை 35 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில் இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாகவும் கருதப்படுகின்றது.

வாக்களிப்புக்காக நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

43 மத்திய நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.