நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய வங்கியில் 27 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றியுள்ளதுடன் பிரதி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஆட்டிகல, இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் பதவியினை வகித்து திறைசேரிக்கான துணைச் செயலாளராக பணியாற்றுவதற்கு நிதி அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.

2018 ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திறைசேரிக்கும் நிதி அமைச்சுக்குமான செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய இராச்சியத்தின் வோர்விக் பல்கலைக்கழகத்தில் அளவுசார் அபிவிருத்திப் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமானிப் பட்டத்தினையும் இவர் பெற்றுள்ளார்.

2003 இல் நிதி அமைச்சுக்கு விடுவிக்கப்படும் வரை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். நிதி அமைச்சில் அரசிறைக் கொள்கை மற்றும் அரசாங்க தொழில்முயற்சிகள் திணைக்களங்கள் இரண்டிலும் பணிப்பாளர் நாயகம் உள்ளடங்கலாக ஆட்டிகல பல பதவிகளை வகித்துள்ளார்.

அரசிறை மற்றும் நாணயக் கொள்கை இரண்டிலும் அவரது நிபுணத்துவ அறிவினையும் அனுபவத்தினையும் பெற்றுக் கொள்வதற்கு இது அவருக்குத் துணையளித்தது.

தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகவும் பணியாற்றியதுடன் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனி, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதிச் சபை உள்ளடங்கலாக பல முக்கிய அரசுக்குரித்தான தொழில் முயற்சிகள் மற்றும் நியதிச்சட்ட சபைகளின் சபைகளில் திறைசேரியினை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அத்துடன் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை கலந்துரையாடுவதற்கான தொழில்நுட்ப குழுவின் பிரதானி போன்ற அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்களிலும் திறைசேரியினை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.