மட்டக்களப்பு – கல்முனை வீதியிலுள்ள கல்லடி பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பொலிஸார் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி, வேலூர் 4ஆம் குறுக்கு, காளி கோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சப் இன்பெஸ்டர், பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று பகல் 1 மணியளவில் கடமை நிமித்தமாக காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதன்போது, கல்லடி இலங்கை வங்கிக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட வீதி வளைவுப் பகுதியில், இடது பக்கத்தில் இருந்து திடீரென வலது பக்கம் வீதி வளைவு பகுதிக்கு விபத்தில் உயிரிழந்தவர், அவரது மகனான சிறுவனுடன் மோட்டர் சைக்கிளைத் திருப்பும்போது, எதிரே வந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன், பொலிஸார் உள்ளிட்ட மூவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.