ஓமான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண்கள் 42 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்த நிலையில் அதன் காரணமாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாத நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்ற இந்த பெண்கள், அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் ஊடாக வேறு வீடுகளுக்கு குறித்த பெண்கள் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய ஊதியத் தொகை குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்கிருந்து தப்பியுள்ள இந்த பெண்கள், அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்த பின்னர் அங்குள்ள தடுப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.