இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை சுமுகமாகவும், நிறுவப்பட்ட நடைமுறையின் பிரகாரமும் முன்னெடுப்பதற்காக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, விசாரணை குறித்த தற்போதைய தகவல்களை வழங்குவதற்காக விரைவில் சுவிஸ் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் இராஜதந்திரப் பணிகள் சீராக இயங்குவதற்கு வசதியாக, இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்திற்கு (1961) ஒரு அரச தரப்பாக பொறுப்பேற்றுள்ள கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி
மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)