யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான

சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டாவது பிரதிவாதியின்றி விளக்கத்தை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுந்தரேஸ்வரன் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரனையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சாட்சியமளித்திருந்த நிலையில், சுவிஸ் குமாரை பொலிஸ் காவலிலிருந்து தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக்கொள்ளை விசாரணை பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, சிறிகஜன் சட்டவிரோதமாக தப்பிச்சென்றுள்ளமை புலனாய்வினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

சாட்சியங்களின் அடிப்படையில் வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுந்தரேஸ்வரன் சிறிகஜன் இன்றி வழக்கிற்கான விளக்கத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குமாறு மன்றில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான சிறிகஜன் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளமை சாட்சியங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளமையினால், பிரதிவாதியின்றி விளக்கத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரம் நாளை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வாசிக்கப்படவுள்ளது.