ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார். இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார். அத்துடன் இந்திய பிரதமருடன், ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்தைகளிலும் ஈடுடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அரசின் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

பிந்திய செய்திகளின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று மாலை இந்தியாவை சென்றடைந்துள்ளார். டெல்லி விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.