இலங்கையின் வடக்கு பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஆறு லட்சத்து 35 ஆயிரத்து 420 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக ஜப்பானிய தூதரகம்ப தெரிவித்துள்ளது.

இந்த நிதி கண்ணிவெடி அகற்றும் ஆலோசனை குழுவொன்றின் மனிதாபிமான அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியாமா சுகீயாமாவிற்கும், கண்ணிவெடி அகற்றும் ஆலோசனை குழுவின் வதிவிட பிரதிநிதி வலன்றீனா ஸ்ரிவனல்லோவிற்கும் இடையே நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேலும் இரண்டு நிதி உதவிகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதன்மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை துரிதப்படுத்துவதற்காக இந்த நிதி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, கனடா உலகளாவிய ரீதியாக கடந்த இரண்டு தசாப்த காலப்பகுதியினில் 45 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஒட்டாவா மாநாட்டு தீர்மானத்திற்கு அமைய இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், கொலம்பியா, உக்ரேன் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.