வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும் அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த உரிமைகள் தேசத்தின் அபிமானமாக கருதப்படல் வேண்டும். அது குறித்து தொல்லியல் திணைக்களத்துக்கு உரிய அறிவுருத்தல்கள் வழங்கப்படும்.

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவம் அகற்றப்பட மாட்டாது. இராணுவ முகாம்கள் இருப்பதால் மக்களுக்கு சேவை வழங்கப்படுமே தவிர ஒருபோதும் மக்களுக்கு நெருக்கடியாக இராணுவம் செயற்படாது. அதனால் இராணுவத்தினர் இருக்க வேண்டிய பகுதிகளில் இருந்து அவர்களை அகற்றப்போவதில்லை.

யுத்த காலத்திலும் வடக்கு கிழக்கு மக்களின் நெருக்கடி நிலைமைகளின்போது இராணுவமே உதவியது. புலிகளிடமிருந்து மீண்ட மக்களுக்கு அரசாங்கத்தால் முடிந்த சகல சலுகைகளும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.