நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 643 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 297 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதன்படி நுவரெலியா ஹற்றன் நோர்வுட் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழையுடன் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக 25 குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கபட்டுள்ளதோடு நோர்வுட் பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகமும், சமுர்த்தி காரியாலயமும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.

மேலும் வலப்பனை பொலிஸ்பிரிவில் ஹங்குராங்கெத்த- வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ – மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு இடம்பெற்ற இவ் அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் கருனாரத்ன வயது (16) என்ற சிறுவனின் சடலமும் யுவதியொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.