நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கு முடியாத வகையில், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விவரங்களை 117 என்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொலை பேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.