நிலவும் மழையுடனான காலநிலை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை சீரற்ற வானிலை காரணமாக 4153 குடும்பங்களை சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிலதிப் கொடிபிலி தெரிவித்துள்ளார். வலப்பனை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி நேற்று 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் தற்போதும் வலப்பனை மடபட்டாவ பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காணாமல் போயுள்ளதுடன் இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்பு பணிகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிலதிப் கொடிபிலி தெரிவித்தார். இந்த அனர்தத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 வீடுகள் முழுமையாகவும் 859 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்டை சூழலுள்ள வளிமண்டலத்தின் காற்று மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழுப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மீல்லி மீட்டருக்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்திலும் மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.